Thursday, August 5, 2010

அப்பா

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா…

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை…

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என…

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை…

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை…
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

– கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

From : http://azeezahmed.wordpress.com/2010/08/01/app-2/

கழிப்பறையில் அழைப்பு

சாதாரண தொலைபேசியால் தான் தொல்லை என்றால் இப்பொழுது செல்லுலர் தொலைபேசிகள் வேறு வந்து விட்டன.

எவரைப் பார்த்தாலும் கைகளுக்குள் கைக்குண்டு வைத்திருப்பது போலப் பற்றிக் கொண்டு வீரநடை போடுகிறார்கள்.
கையில் இருக்கும், இல்லாவிட்டால்
ஷேட் பொக்கற்றுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்.
அல்லது இடுப்பில் தொங்கும்.


















ரெஸ்ராரன்டில் நண்பர்களுடன் குளிர் ஊட்டப்பட்ட பியர் அடித்துக் கொண்டிருந்த கந்தசாமியாருக்கு முடுக்கிக் கொண்டு வந்தது.

கொஞ்சம் தாமதித்தால் முட்டி வழிந்து மார்பிள் தரையில் சிந்தி
தன்னையும் மற்றவர்களையும் சறுக்கீஸ் விளையாட வைத்துவிடும்.

பயம் கிளம்ப கழிவறையைத்
தேடிக் கண்டு பிடித்தார்.

முதல் கூடு மூடிக்கிடந்ததால் அடுத்ததை நோக்கி விரைந்தார்.
நல்ல காலம் அதற்குள் யாருமில்லை.
உள்ளே நுழைந்த அவர் சிப்பை திறந்து
வெளியில் எடுத்து,
பாரம் இறக்கத் தொடங்கினார்.




















"எப்படிப் போகுது"
அமானுசக் குரல் எழுந்தது.

யாராவது எட்டிப் பார்க்கிறார்களா என்ற திகைப்பு எழுந்தது,
சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமில்லை.

குரல் முதலாவது கூடத்திலிருந்து வருவது புரிந்ததும் திகைப்பு அடங்கியது.

ஆயினும் பொதுக் கழிப்பறையிலிருந்து
மற்றவர்களுடன் பேசுவது
இவருக்கு உவப்பானதல்ல.
வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது.


"என்ன சத்தத்தைக் காணவில்லையே"
மற்றவர் திரும்பவும் கேட்டார்.

"கேடுகெட்ட மனிதன்.
என்ன பேசுவது என்று தெரியாமல்
கதைக்கிறான்."
கந்தசாமியாருக்கு என்ன மறுமொழி சொல்வது
என்று தெரியவில்லை.

"நல்லாப் போகுது"
எரிச்சலை அடக்கிக் கொண்டு பதிலளித்தார்.
உண்மையிலேயே எரிச்சல் இன்றி
குழாயைத் திறந்தது போல
பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது.

"எனக்கு வேலை முடிஞ்சுது.
நான் புறப்படப் போறன். நீயும் வாறியா"
மற்றவர் கேட்டார்.

இவருக்கு இன்னமும் அரைவாசி மீதமிருந்தது.
முழுவதையும் இறக்கினால்தான்
நிம்மதியாகும்.
அதோடை இவன்ரை பேச்சுத் தொல்லையையும்
வெட்ட நினைத்தார்.

"எனக்கு முடியவில்லை.
நான் முடிச்சுக் கொண்டு வாரன் நீ போ"
இவர் பதிலளித்தார்.

"மடையன்"
பக்கத்துக் கூட்டிலிருந்து கோபமாகக் குரல் எழுந்தது.

இதைக் கேட்டதும் கந்தசாமியாரின்
கையும் மனமும் சேர்ந்து பதறின.

"டார்லிங்!
...நான் உன்னோடை செல்லில் பேசுறதுக்கு
பக்கத்து யூரினலில் நிற்பவன்
தானே மறுமாழி சொல்லுறான்....
இடியட்"

விசயம் புரிவதற்கிடையில்
நடுங்கிய கை விட்டுப் போனதால்
கந்தசாமியாரின் ரவுஸ்சர்
நனைந்துவிட்டது.
நன்றி : சேது

Thursday, June 4, 2009

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.

சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.

ஒரே இலக்குடன் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நீங்கள் எதற்கு வெவ்வேறு இயக்கங்களை ஆரம்பித்தீர்கள் என்பதே புரியவில்லை எங்களுக்கு. சிவகுமாரன் தொடக்கி வைத்தான். டெலோ அமைப்பின் குட்டிமணி ஜெகன் தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட, பிரபாகரன் என்னும் துடிப்பும் வீரமும் நிறைந்த இளைஞன் வழி தொடர்ந்தான். சரி, சொந்தப் பிரச்சனையால் உமா மகேஸ்வரன் பிரிந்து போனான். புளொட் அமைப்பை உருவாக்கினான். எல்லாம் சரி. அதன் பிறகு சேர்ந்த இளைஞர்கள் ஒன்று பிரபாகரனுடன் அல்லது உமா மகேஸ்வரனுடன் அல்லது டெலோவில் சேர வேண்டியது தானே? எதற்கு மழைக்கு முழைத்த காளான்கள் மாதிரி புது புது இயக்கங்களை உருவாக்கினீர்கள்? தமிழ் ஈழம் என்ற ஒரே கொள்கை தானே உங்களிடம் அன்று இருந்தது? கண்ணீர்த்துளி போல இருக்கும் இலங்கையிலிருந்து பிரியப் போகும் தமிழ் ஈழத்தை ஆளுக்கொரு குறிசசியாகப் பிரித்து ஆட்சி செய்யவா? 8 மாவட்டங்களைக் கொண்ட தமிழ் ஈழத்தை வென்றெடுக்க அமைக்கப் பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா? 8 அல்லது அதற்கும் மேல்.டெலோ., L.T.T.E, ஈரோஸ்,புளொட், E.P.R.L.F., E.N.D.L.F., TELF, EPDP, . இவை என் ஞாபகத்தில் இருப்பவை. இதைவிட இன்னும் இருந்ததோ எனக்குத் தெரியாது.

கிட்டு, எங்கள் பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று கோண்டாவிலில் வைத்து டெலோ தலைவர் உயிர்ப் பிச்சை கேட்டும் சுட்டுக் கொல்லப் பட்டர் என்பதை நினைவு கூருகிறீர்களே,உங்கள் பிரச்சனை என்ன என்று எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் போகும் வரையிலும் ஒற்றுமையாய் இராணுவத்தைத் தாக்கிய நீங்கள் அதன் பிறகு உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்.கிடைப்பது எதுவானாலும் அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற சந்தர்ப்பவாதிகளுக்கும் தமிழ் ஈழம் என்ற நினைத்த குறிக்கோள் வேண்டும் என்ற லட்சிய வாதிக்கும் இடையில் சிக்கி திம்பு பேச்சுவார்த்தை சீரழிந்தது எமக்கும் தெரியும் “தோழர்களே.”

உங்களதும் புலிகளும் போராட்டங்கள் என் வயதுடன் வளர்ந்தவை. நித்தம் நித்தம் அவதானித்ததையும் அனுபவித்ததையும் மட்டுமே இங்கு சொல்கிறேன்.ஆனாலும் இந்தக் கொலைகள் விடயத்தில் புலிகளை அப்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டபோது நீங்கள் இப்போது நினைவு கூரும் வாசுதேவாவை,பாரூக்கை தெருவில் சுடப்பட்டுக் கிடந்த ஸ்ரீ சபாரத்தினத்தை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன், எதற்கு இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று ஆத்திரப் பட்டிருக்கிறேன். எங்களைப் புலிகள் இப்படி அழித்திருக்கா விட்டால் நாங்களும் எங்கள் மக்களுக்காகப் போராடியிருப்போம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையாக இருக்குமோ என்று நினைத்திருக்கிறேன்.
எல்லாம் 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் ஆரம்பிக்கும் வரைக்கும் தான். புலிகள் காட்டுக்குப் போனதும் இந்திய ராணுவத்தின் ஆளுகைக்குள் நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நீங்கள் கூறியபடி சந்தர்ப்பம் உங்களுக்குத் தரப்பட்டது.என்ன செய்தீர்கள் “தோழர்களே?” எங்களுக்காகப் போராட வேண்டாம், நாங்கள் அழிவதை, எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்தினீர்களா? இவற்றையெல்லாம் நீங்களே செய்தீர்களே?புலிகளை மட்டுமா நாங்கள் வளர்த்தோம்?உங்களையும் நாங்கள் தானே வளர்த்தோம்? உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டதற்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பழி தீர்த்துக் கொண்டீர்களே?

84,85 களில் எங்கள் வீட்டில் இருந்தே தினமும் 5 பேருக்கு சாப்பாடு பார்சல் போகும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் என்ற முறையில். ஆனால் புலிகளுக்கு உணவு கொடுத்ததாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசலில் துப்பாக்கியோடு நின்றீர்கள்.உங்களுக்கும் தானே தந்தோம் என்பதை மறந்து என் சகோதரனை மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே?
1988 இல செயின்ட். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் தேவகுமாரனை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்து முகமே அடையாளம் தெரியாதவாறு மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? அவன் செய்த தேசத் துரோகம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கிடையில் விநியோகித்தது தான்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானபோது நீங்கள் பிணமாகத் தெருவில் போட்ட தேவகுமாரன் உயிரியல் பாடத்தில் 4 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்தான்.
சொல்லுங்கள் “தோழர்களே” இவர்கள் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு ஆசிரியர் கிருஷ்னானந்தனை? தெருவோரம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியரின் மகன் அகிலனை? இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைக் கண்டித்து மறியல் போராட்டம் செய்ததற்காக சுட்டுக் கொல்லப் பட்ட மருத்துவபீட மாணவன் சத்தியேந்திராவை, ஏதோ ஒரு உத்வேகத்தில் புலிகள் இயக்கத்துக்குப் போய் விட்டு பயிற்சியின் கடுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 மாதத்திலேயே திரும்பி வந்து சாதாரண வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் மோகனை இந்திய ராணுவத்துக்குக் கூடத் தெரியாமல் விசாரணைக்கு என்று அழைத்துச்சென்றீர்கள். இரண்டு நாள் கழித்து அவனை சத்தகக் காம்பாலேயே உடல்முழுதும் குத்திக் கொலை செய்து கொண்டு வந்து தெருவில் போட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? எங்கேயோ கேட்ட துப்பாக்கிச் சத்தத்துக்கு அருகில் இருந்த கல்லூரிக்குள் சென்று வகுப்பறைக்குள் நீங்கள் சரமாரியாகச் சுட்டதில் பலியான மாணவர்களை, படுகாயமடைந்த மாணவர்களை, ஆசிரியரை,ஞாபகம் இருக்கிறதா?

இவர்களை ஞாபகப் படுத்த எனக்கு எந்தக் குறிப்பேடும் தேவைப் படவில்லை.ஏனெனில் நான் பள்ளி செல்லும் போது வழியில் தெருவில் கண்டு சென்ற பிணங்கள் இவர்கள்.பெண்களையும் சிறுவர்களையும் மயானத்துக்கு செல்ல அனுமதிக்காத சமூகத்தில் உங்கள் தயவாலும் இந்திய ராணுவத்தின் தயவாலும் பிணங்களையும் டயர் போட்டு எரிக்கப் பட்ட எலும்புக் கூடுகளையும் நாங்கள் தெருவில் பார்த்தே வளர்ந்தோம். உங்களால் பலவந்தமாகத் தேசிய இராணுவத்துக்கு என்று பிடித்துச் செல்லப் பட்ட என் ஒன்று விட்ட சகோதரன் இன்றுவரை உயிருடன் உள்ளான இல்லையா என்று எமக்குத் தெரியாது.

சொல்லுங்கள் தோழர்களே இவர்களில் யார் நீங்கள் சொன்னபடி கிட்டு அல்லது அவருடன் சேர்ந்து உங்கள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றார்கள்? துப்பாக்கிகளைக் கையில் வைத்திருந்த உங்கள் தலைவர்கள் யுகப் பிச்சை கேட்டும் புலிகள் கேட்கவில்லை என்று சொல்கிறீர்களே. நாங்கள் உங்களுக்கு எதிராகவோ இந்திய ராணுவத்துக்கு எதிராகவோ சிறு தடியைக் கூட எடுக்காமல் அல்லவே உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்டோம்?. உங்கள் தலைவர்கள் பெயர் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இவர்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? கிடையாது. நாங்கள் பாவப் பட்ட பொதுஜனங்கள்.ஆனால் உங்களால் கொலைகாரன் என்று சொல்லப்பட்ட கிட்டுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டு மாமா என்றே அழைத்தோம்.அவருக்கு ஒரு கால் போனதற்கே மக்கள் எப்படித் துடி துடித்துப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள்.

நானும் என் அண்ணனும் வீட்டில் தனியே இருந்தசமயம் உள்ளே நுழைந்த இந்திய ராணுவத்தினர் எங்களை தனித் தனி மூலைகளில் மடக்கியபோது, எனக்கு நடக்கவிருந்த கொடுமையின் முழு வடிவம் கூடத் தெரியாத வயதில் இராணுவத்தால் பக்கத்து அறைக்கு நான் நெட்டித் தள்ளப் பட்ட போது நீங்களும் அருகில் நின்றீர்கள்.விகாரச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தீர்கள்.. என்னைப் பிடித்துத் தன்பின்னே நிறுத்தி தன் துப்பாக்கியை தன் சகாக்களை நோக்கி நீட்டி என்னைக் காக்க ஒரு தமிழகத்துத் தமிழனால் மட்டும்தான் முடிந்தது. சொல்லுங்கள் “தோழர்களே” உங்கள் கையில் இருந்த ஆயுதங்கள் யாரைக் காக்க யாருக்கு எதிராக ஏந்தப் பட்டவை?ராஜிவ் காந்திக்கு நன்றி. குறைந்த எண்ணிக்கையிலேனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களையும் அமைதிப் படையில் அனுப்பி வைத்ததற்கு.அவர்கள் தான் தங்கள் சகாக்களிடமிருந்து மட்டுமல்ல உங்களிடமும் இருந்தும் தங்களால் முடிந்தவரையில் எங்களைக் காத்தார்கள்.

மேலே நான் சொன்னது அத்தனையும் யாழ் மண்ணில் மூன்று தெருக்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியில் அந்தக் காலப் பகுதியில் தாங்கள் உயர் ஜாதியினர் என்ற அகந்தையும் பரம்பரைக் கல்விமான்கள் என்கின்ற ஆணவமும் கொண்ட சுயநல சமூகமான எங்கள் முதல் தலைமுறைகளும் எங்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தாகக் கொண்டு போனால் போகிறது என்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் அளவுக்கு மட்டும் சமூக அக்கறை கொண்ட எங்கள் தலைமுறைகளும் வாழ்ந்த இடத்தில் – யாருடைய போராட்டத்துடனும் அதிகம் பட்டுக் கொள்ளாத மக்களுக்கு நீங்கள் நடத்திய கொடுமைகளின் சிறிய அத்தியாயம். இவர்களையும் ஆவேசம் உள்ளவர்களாக மாற்றியது உங்கள் நடவடிக்கைகள்.இவர்களுக்கே இப்படி என்றால் உண்மையாகவே முழுமனதுடன் போராட்டத்தை ஆதரித்த மக்களுக்கும், தமிழ் ஈழமண்ணின் எல்லா மாவட்டங்களிலும் நீங்கள் செய்ததைப் பட்டியல் போட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி ரத்தத்தில் தோய்ந்த இதிகாசங்கள் எழுதலாம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் குணங்களோ கூடப் பிறந்த சகோதரர் , பெற்றோரோ தங்கள் மானத்தைக் காக்க முடியாது என்று உணர்ந்த பெண்களும், தாங்கள் சொல்லும் மந்திரங்களும் கற்பூரம் காட்டும் கடவுள்களும் தங்களைக் காக மாட்டாது என்று பூணூலைக் கழட்டி எறிந்து விட்டு இளைஞர்களும் என எல்லா சமூகத்தவரும் இரவுகளில் வீட்டை விட்டு வெளியேறி கானகம் நோக்கிச் சென்றது உங்கள் அட்டகாசங்களால் தான். தங்கள் மகள் வெளியேறியபின்னர் இனி அவள் மானத்துடன் இருப்பாள் என்ற நிம்மதியில் நீங்கள் வந்து விசாரிக்கும் போது அவள் யாரோடோ ஓடிப் போய் விட்டாள் என்று தலை நிமிர்ந்து பெற்றோர் சொன்ன அதிசயம் நிகழ்த்திக் காட்டியவர்கள் நீங்கள்.

எங்கள் தேசியத்தலைவர் எத்தனை பெரிய தீர்க்கதரிசி என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர் இடத்தில் நின்று பார்க்க எனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை என்றாலும் ஒரு கணம் நின்று பார்க்கிறேன்.நீங்கள் சொன்னபடி உங்களுடன் ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இது என்ன தமிழ் நாட்டு அரசியல் மேடையா கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக் கொள்ள? ஆயுதப் போராட்டம். படைபலத்தை மட்டுமே நம்பி இருப்பது. போராடத் துணிந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையே கொஞ்சம். அதையும் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வீர்கள். அதன் பிறகு போராட்டத்தின் ஆரம்பத்திலேயே காட்டிக் கொடுப்பவர், தலைமைக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் போராட்டத்தைக் கைவிடும் இயக்கம், எதோ கொஞ்ச அதிகாரம் வந்தால் போதும் என்று விலகும் இயக்கம், ஒன்றும் வேண்டாம் மது,மாது, பதவி சுகம் கிடைத்தால் போதும் என்று கைவிடும் இயக்கம் என்று பிரிந்து சென்றால், போராடச் சேர்ந்த இளைஞர்களும் தவறான பாதைக்கு போக நேர்ந்தால், ஒரே லட்சியத்துடன் போராடுபவன் என்ன செய்ய முடியும்? உங்களை அவர்கள் தங்கள் லட்சியப் பாதையிலிருந்து அகற்றிய படியால் தான் தமிழ் ஈழப் போராட்டம் மாபெரும் சக்தியாக எழுந்தது. இன்று உலக நாடுகள் அனைத்தும் , ஐ.நா. வரைக்கும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களாலும் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளாலும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலாலும் மட்டுமே தான்.அவர்கள் உங்களை அகற்றிய விதம் தப்பாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் லட்சியத்தின் தடைக் கற்கள், அகற்றப் பட வேண்டியவர்கள் என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்களே? தலைவர் தான் ஆள வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.போராட்ட இலக்கு தமிழ் ஈழம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே இதைச் செய்துள்ளார். ஈரோஸ் இயக்கத்தை புலிகள் அப்படியே உள்வாங்கிக் கொண்டதும் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் இதற்குச் சான்று.

.உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான். அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்காக போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா? இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?

முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்

மதியழகி

நன்றி - மதியழகி, நெருடல்.com

Friday, May 22, 2009

பிரபாகரன் விரைவில் வருவான்: அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்.

-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

""வா பகையே... வா...

வந்தெம் நெஞ்சேறி மிதி.

பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.

வேரைத் தழித்து வீழ்த்து.

ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்

நினைவில் கொள்!''

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

நன்றி நக்கீரன் வார இதழ்

Tuesday, May 12, 2009

தயவுசெய்து மாறுங்கள்

"வைக்கல் பட்டடை நாய்" என்று சொல்வார்கள் அது அப்பிடியே எங்கட இனமான தமிழினத்திற்குத்தான் பொருந்தும். ஏனென்றால் பாருங்கள்,

எங்கட நாடு பற்றி எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கட அம்மா அண்ணை அக்கா எல்லாரும் எரிகுண்டுகளாலும் பசியாலும் நாளாந்தம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் உறவுகள் புலம்பெயர் தேசங்களிலிருந்தவாறு பல்வேறுபட்ட போராட்டங்கள்…..தங்களை பசியால் வாட்டி அந்தந்த நாட்டின் அரசிற்கு தங்களின் வேதனையை புரியவைக்க முற்படுகிறார்கள், வீதித்தடைகளை ஏற்படுத்தி கவனத்தையீர்க்கப்போராடுகிறார்கள் ஏன் அண்மையில் இந்தியத்தொலைக்காட்சியில் ஒரு கலைஞர் தன் நடனத்தின் மூலம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். இவ்வாறு ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை வேதனைகளை வலிகளை காட்டுகிறார்கள். அம்மா உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சிரிச்சுக்கொண்டா இருக்க முடியும் எல்லோரும்தான் அழுவார்கள் அதைத்தடுத்து நிறுத்தப்போராடுவார்கள்…போராட உணர்த்தப்படுவார்கள் அப்படி உணராவிட்டால் பிறகென்ன மனிதர்கள் நாங்கள். நான் ஏன் இதைச்சொல்ல வாறேனென்றால் இப்படி உணராதவர்கள் பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

அங்கு போராடத்துணிவில்லை சரி இங்குவந்தோம் இங்கு எமதுயிருக்கு எந்த பாதிப்புமில்லை என்றவிடத்தில் நாம் இங்கிருந்தவாறு போராடலாம் சரி அதற்கும் சில நாடுகளில் வழியில்லையென்று வைத்துக்கொள்ளுங்களேன் இணையத்தளங்களினூடாக பல பத்திரிகைச்செய்திகள் வருகின்றன அதற்கு கருத்துகள் எழுதுவதிலும் கருத்துக்கணிப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் காட்டலாம். இதை "ஏதாவது செய்யவேண்டுமென" நினைப்பவன் நிச்சயம் செய்வான். ஆனால் சிலர் இருக்கிறார்கள் இதைச்செய்யமாட்டார்கள் (இதுக்கு அவர்களின் 1008 நியாயப்படுத்தல்கள், அதை விடுவம்) சரி இவர்கள் போராடுபவர்களை வாழ்த்தக்கூடவேண்டாம் கொச்சைப்படுத்தாமல் பேசாமல் இருந்தால் கூட எவ்வளவு மேலான விடயமாகவிருக்கும். ஆனால்,

ஒருவன் பசியால் தன்னை வருத்தி போராடிக்கொண்டிருக்கிறான். இந்த புண்ணியவான்கள் என்ன கதைக்கிறார்கள்……….இவன் இயக்கமாயிருக்கும் இல்லாட்டில் அவே பயிற்சிகுடுத்து அனுப்பியிருப்பினம்" இப்படி பல. ஒருதன் நடனத்தின் மூலம் தன் வேதனையை வலியை சொல்லுகிறான் உடனே இந்த புறம்போக்குகள் என்ன சொல்லுதென்றால் " இவனையும் இவன் குழுவையும் இயக்கம்தான் பயிற்சிகுடுத்து அனுப்பியிருக்கு" எப்பிடியிருக்கும். அடே முட்டாள்களே உங்கட அம்மா வலியால் துடிக்கும்போது உங்களை அழுறதுக்கு பயிற்சி கொடுத்தா அனுப்ப வேண்டும் கொஞ்சமாவது யோசிச்சுத்தான் கதைக்கிறீர்களா?

புலம்பெயர் நாடுகளில் பலர் வீதியில் இறங்கி பல்வேறுவகையில் போராடுகிறார்கள். பொலிஸில் அடிவாங்கி இரவு பகலா குளிரிக்க நின்று போராடுறாங்கள் என்னடா என்று இந்த புறம்போக்குகளிடம் கேட்டால் " இவங்கள் என்ன உண்மையான உணர்வோடையா போராடுகிறாங்கள் சும்மா பம்பலா போய் கூத்தடிக்கிறாங்கள், இவங்களுக்கு போராட்டத்தின் அடி நுனி தெரியுமோ? " என்கிறார்கள். இவங்களுக்கு குளிரிக்க போய் இரவு பகலா வீதில நிக்கிறது பம்பலா கிடக்கு எங்க நீ போய் பம்பலா நில் பார்ப்பமென்றால் முடியாது. யோசிப்பதேயில்லை சும்மா கதைக்கவேணுமென்றதுக்காக கதைப்பது. என்ன ஒவ்வொருவனுக்கும் எவ்வளவு உணர்வு இருக்கு போராட்டத்தைப்பற்றி என்ன தெரியுமென்று நேர்முகத்தேர்வு நடத்தியா போராட்டத்திற்கு அனுப்பமுடியும். அவன் அவன் தன்னெழுச்சியா காலத்திற்கெற்றவாறு போராடுகிறான் அதுவே போதுமே வேறயென்ன வேண்டும். சரி நீ போராட்டத்தின் அடி நுனி தெரிஞ்சனி போய் செய்யென்றால் அது முடியாது அதுக்கு 1008 நியாயப்படுத்தல் சொல்லி பின்வாங்கிறது. இதுக்காகத்தான் சொன்னேன் வைக்கல் பட்டடை நாய்கள் என்று இவர்களை.

இந்த புறம்போக்குகள் அடிக்கடியொன்றை சொல்லுவார்கள். நாங்கள் வெறிபிடித்தவர்களாம் இப்ப மக்கள் கொல்லப்படும்போது கதறுகிறோமாம் சிங்கள இடத்தில் குண்டு வெடித்து மக்கள் சாகும்போது மட்டும் சந்தோஷப்படுகிறமாம். இவர்களுக்கு ஒன்றைச்சொல்லுகிறேன் நாங்கள் சந்தோஷப்பட்டதுமில்லை ஆனால் அதே நேரம் கவலைப்பட்டதுமில்லை. ஏனெனில் என்னுடைய வீட்டில் அக்காவை கோரமாக கண்முன்னால் கற்பழிச்சு கொலைசெய்ய அதைப்பார்த்த ஆத்திரத்தில் அண்ணன் போய் அவனுடைய குடும்பத்தை கொலைசெய்தால் நானென்ன அண்ணனை கண்டிக்கவா முடியும் அந்த குடும்பத்திற்காக கவலைப்படவா முடியும் இப்படி அண்ணனை செய்யவைத்துவிட்டாயே என்று கவலைப்படத்தான் முடியும். ஏன் அவனை கொலைசெய்யாமல் அவன் குடும்பத்தை கொல்லவேண்டுமென கேள்விவரும். அவன் ஒவ்வொருமுறையும் அவனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிற அண்ணனுடன் சண்டையிடாமல் சுலபமா போய் அப்பாவியான அக்காவைத்தான் தாக்கினால் அவனுக்கு அண்ணன் வேறயெவ்வாறு பதில்கொடுக்கமுடியும். சரி இதையெல்லாவற்றையும் விடுவம். இன்றைக்கு என்ன நடக்கிறது எங்கயாவது சிங்கள இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். என்ன நியாயம் கிடைத்தது?

நானும் முன்னர் இப்படித்தான் ஏதாவது யாராவது தீவிரமா போராடினால் அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து இவர் இயக்கமாத்தானிருக்குமென்று ஊகிச்சு கதைப்பது, பின்னர் இப்பதான் உணர்ந்தேன் நான் எவ்வளவு கேவலமா கதைத்திருக்கிறேனென்று ஒரு மனிதனுடை உண்மையான உணர்வை மதிக்கத்தவறியிருக்கிறேன்று. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். உண்மையில் ஒரு போராளியின் உணர்வைத்தான் விளங்கிக்கொள்ளத்தவறியிருக்கிறேன் ("இயக்கமாதானிருக்கும்" என்றதிலையே எதோ இயக்கமென்றது ஒரு பயிற்றப்பட்ட இயந்திரம் என்ற கருத்தே தொக்கிநிற்கிறது). ஆகவே இப்பவும் இதே புறம்போக்குத்தன்மையுடனிருக்கும் நண்பர்களே தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து போராடுவோம். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Friday, May 8, 2009

ஈழத்து நடனப்புயல்

இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு தமிழீழ மகன் மிக அருமையாக தனது நடனத்தின் மூலம் ஈழத்து இனப்படுகொலையை மிக உணர்ச்சிகரமாக வெளிக்காட்டியுள்ளார்



எமது மக்களின் துயரங்களை வெளிக்கொணர்வதில் தொடர்ந்து இந்திய தொலைக்காட்சிகள் பின்னடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த தொலைக்காட்சியொன்றின் சாதரண நிகழ்ச்சியொன்றின் ஊடாக மிக அழகாக எம் மக்களின் துயர்களை தத்ருபாமாக காட்டியுள்ளார் நடனக்கலைஞர். அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் இப்பவும் இணையத்தளங்களூடாக பார்க்கின்றவர்களையும் கண்ணில நீர் வருமளவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நடனம் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அவர் குழுவினருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.

Thursday, May 7, 2009

சீனாக்களோடு ஒரு நாள் சாப்பாடு

எனக்கு இந்த நாட்டுக்கு வரமுன்னுக்கே சீனாக்களின் சாப்பாட்டைப்பற்றி நிரம்ப கேள்விஞானமிருந்திச்சு; தவளை சாப்பிடுவாங்களாம், கரப்பொத்தான் பாம்பு என்று என்னெனமோ எல்லாம் சாப்பிடுவாங்க என்று கேள்வி. சத்தியமா சொல்லிறேங்க இங்க வந்தப்பிறகுதான் கேள்விப்பட்டன் இவற்றோடு நாய், பூனை, எறும்பு எல்லாம் சாப்பிடுவாங்களாம் (என்ன வேடுவப்பிறவியளோ). இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு யாருகாச்சும் சாப்பிட மனம்வருமோ அப்பிடித்தாங்க எனக்கும்


ஆனால் எங்கட ஆபிஸில அன்புத்தொல்லை தாங்கலாது.எத்தினை நாளைக்குத்தான் நான் மரக்கறிதான் சாப்பிடுவனென்று புளுகிக்கொண்டிருப்பது. இதால ஒரு நாள் அவங்களோட போய் சாப்பிட வெளிக்கிட்டன். என்னடா இது எங்கட இடமென்றால் சாப்பாட்டு கடைக்கில உள்ளடக்கையே ஆசையாத்தான் இருக்கும் இதென்ன கோதாரியென்றால் ஆத்தே மணமென்றாலோ…….site office ல சீனன் ஒருதன் lunch box ய் திறக்கேக்க நாங்கள் ஓடுற ஓட்டத்திலயே தெரியும் அதுக்காக இந்த hotel லிலுமா

ஒருமாதிரி அங்கல போய் ஒரு மேசைல இருந்தோம். நல்ல வடிவான மேசை, நல்ல வெள்ளக்கலரில மேசைச்சீலையும் விரிச்சுக்கிடந்துச்சு. கோப்பையல் தடியல் எல்லாம் கொண்டுவந்து வைச்சார்கள்.நான் அந்த தடியை திருப்பிக்குடுத்திட்டு கரண்டி வாங்கினேன். எனக்கு அந்த தடியால சாப்பிடறதெல்லாம் வராது (அதென்ன கோதாரிக்கு தடியை வச்சு ஆட்டுறவங்களோ தெரியாது). சரி சாப்பாடு வந்திச்சு, இன்றைக்கு சத்தி வராமல் மானத்தை காப்பற்ற வேணுமென்று எல்லா கடவுளையும் நினைச்சுக்கொண்டு தொடங்கினன். உண்மைலே அந்தப்பக்கம் கடவுள் எட்டியும் பார்க்கமாட்டார் ஏனெனில் மனிதனை தவிர்ந்த எல்லாம் மேசைல வைச்சிருக்கு பிறகெப்படி அந்தாள் எட்டிப்பார்ப்பார். பக்கத்தில இருந்தவரை தட்டி இதென்னென்று கேட்டேன் அவரும் chicken என்றார் அப்பா நிம்மதி எதோ தெரிந்தவொன்றிருக்கே என்ற நிம்மதி. தீர்மானிச்சாச்சு இதில ஒரு பெரிய துண்டை எடுத்து இதோடயே இன்று முழுக்க சாமாளிப்பதென. பெரிய துண்டை தூக்கி கோப்பைக்கில போட்டு சாப்பிடத்தொடங்கினால் அறு சுவையில ஒரு விதமான ரேஸ்டையும் காணோம். இதெப்படி செய்ததென்று பக்கத்தில கேட்டால் அப்பிடியே செட்டைகளை உரிச்சிட்டு அடுப்புக்கு மேல கிழமைக்கணக்கா தொங்கவிட்டுட்டு அதெயெடுத்து சாப்பிடுவாங்களாம். அப்பதான் யோசிச்சன் அடப்பாவி இவங்க இப்பதான் மனிதன் ஊனை சுட்டு சாப்பிட்டால் சுவையென்று கண்டதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாங்கள். அய்யோ எப்படித்தான் சாமாளிக்கப்போறனோ என்றவாறு மற்ற item ங்களை பார்க்கக்கே இது பராவாயில்லையென்று கிடந்திச்சு.


அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு சரி அவங்கள் எப்படித்தான் சாப்பிடிறாங்கள் என்று பார்ப்பமென்று தலையை நிமிர்த்தினால் அடச் சீ அப்பதான் யோச்சன் ஏன் தான் பார்த்தமென்று. உண்மைலே சாப்பட்டு மணத்துக்கு அடக்கி வச்சிருந்த வயிறு குமட்டத்தொடங்கியது. எல்லாரையும் பார்க்கிறன் அப்படியே அந்த தடியால எடுத்து முழுசா வாய்க்குள் போட்டு சப்பு சப்பு என்று சப்பிட்டு மிச்சம் மீதியை மேசைல துப்பிவிடுவாங்கள் ( நாயில இருந்து கொஞ்சம் தான் develop ஆகியிருப்பாங்கள் போல). அப்பிடியே மேசையெல்லாம் பரவிக்கிடக்கும். இதைவிட எங்களுக்கு எதெல்லாம் indecent வேலையல் என்று சொல்லித்தந்தார்களோ அதெல்லாத்தையும் செய்வார்கள். ஒருதனை பார்க்கிறன் அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு மூக்கை தோண்டுகிறான் எப்பிடியிருந்திருக்கும் எனக்கு. இப்படியா ஒரு மாதிரி அன்றய சாப்பாடு முடிஞ்சுது. ஆனால் இப்ப என்ன ஒரளவுக்கு பழகிட்டுது (அதுக்காக நான் வேடுவ காலத்துக்கு போயிட்டனென்று நினைக்கதிங்க)